மத்திய மண்டலம்
ஆகஸ்ட் 27 ரோஹ்தாஸ் பணித்தளத்தில் ஜூலை 2 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான ஒருநாள் கருத்தரங்கில் ரோஹ்தாஸ் மற்றும் சுற்றியுள்ள பணித்தளங்களைச் சேர்ந்த 200 விசுவாசிகள் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற ஊழியர் கூடுகையிலும் பணித்தள ஊழியர்கள் குடும்பமாகக் கலந்துகொண்டனர். இக்கூடுகைகளில், சகோ. எபிநேசர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளையும் மற்றும் ஊழியர்களையும் உற்சாகப்படுத்தினார். திலௌத்து பணித்தளத்தில் சுற்றுச் சுவர் கட்டுவதில் உண்டாகியிருக்கும் பிரச்சனைகள் நீங்கவும், நவாட்டா பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட ஏற்றச் சூழ்நிலை உருவாகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 28 நாகடோலி, கல்யான்பூர், தாராநகர், ஜோனா, சுன்ஹட்டா, சந்தன்புரா, K-6, நிம்ஹட், நவ்டியா, பசாடி, டிலாபாத், சுட்டியா, டெட்ரார், தரிஹட், அம்பா, நவிநகர், டால்மியாநகர், லாவாபார் மற்றும் சேவஹி ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக 2145 சிறுவர்களுக்கு, பாடல்கள், வேதாகமச் சம்பவங்கள் மற்றும் வேத வசனங்கள் மூலமாகக் கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. இச்சிறுவர்களின் பெற்றோர்களுக்காகவும், இவர்களது எதிர்காலத்திற்காகவும் மற்றும் இவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 29 உச்சைலா பணித்தளத்தில் ஞாயிறு தோறும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில், 47 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றுவருகின்றனர். படுக்கா பத்வா பணித்தளத்தில் கட்டப்பட்டு வரும் பகற் பாதுகாப்பு மையப் பள்ளிக் கட்டிடப் பணிகளுக்காகவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும், பஞ்சாரி பணித்தள ஆலயச் சுற்றுச் சுவர் பணிகளுக்காகவும் நாசிரிகஞ்ச் பணித்தள விசுவாசிகள் தவறான உபதேசங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 30 ரோஹ்தாஸ் பணித்தளத்தில் LKG முதல் 2-ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியினைத் தொடங்க கர்த்தர் உதவி செய்தார். ஜூலை 7 அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் பள்ளியைத் திறந்துவைத்தார். K-6 பணித்தளத்தில், 75 பேருக்கு உணவளித்து, கிறிஸ்துவின் அன்பினையும் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். அம்பா மற்றும் நபிநகர் ஆகிய பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் நீங்கவும், டால்மியாநகர் பணித்தளத்தில் விரைவில் ஆலயம் கட்டப்படும் ஜெபிப்போம்.
ஆகஸ்ட் 31 சகோதரி பசந்தி குமாரி சுவிசேஷத்திற்குச் செவிகொடுத்து, தொடர்ந்து ஆலய ஆராதனையில் பங்கேற்றுவருகிறார். சுகவீனமாயிருந்த பூனம் குமாரி ஜெபத்தினால் சுகமடைந்தார். மனைவி ஆலயத்திற்குச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த சஞ்சைராம், தனது நெஞ்சுவலி சுகமானதினால் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகிறார். ஜெபத்தின் பலனால், பிங்கி - பிரபு தம்பதியினருக்கு 15 வருடங்களுக்குப் பின் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்து கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தள விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், சுகவீனமாயிருக்கும் விசுவாசிகளின் குடும்பத்தினர் சுகம் பெறவும் ஜெபிப்போம்.