மத்திய மண்டலம்
செப்டம்பர் 26 நபிநகர், டெஹ்ரி ஆன் சோன் உட்பட பல்வேறு பணித்தளங்களில் நடைபெற்ற வீட்டுக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். தரிஹட் பணித்தளத்தில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் 90 பேர் பங்கேற்றனர். அத்துடன், கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற உபவாசம் கூடுகையில் 150 பேரும், நாசிரிகஞ்ச் பணித்தளத்தில் மூன்று நாட்களில் நடைபெற்ற உபவாசக் கூடுகையில் 43 பேரும், பஞ்சாரி பணித்தளத்தில் நடைபெற்ற உபவாச கூடுகையில் 60 பேரும் கலந்து கொண்டு பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்று வரும் வீட்டுக் கூடுகைகளுக்காகவும், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 27 டால்மியாநகர், பெசினிகேலா, ரபிகஞ்ச், மோனிநகர், பஸ்டி, ஹஸ்புரடி, அஹியாபுர், ஜினோரியா, கமரியா, கைத்தி, திலௌத்து, தும்பா, பூர்ணாதி, கமால், கைர்வா, கர்மா ஆகிய பணித்தளங்களில் 1090 சிறுவர் சிறுமியருக்கு வசனங்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். ஜெப வேளையின்போது 350 சிறுவர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். உச்சைலா பணித்தளத்தில் நடைபெற்ற வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர் பங்கேற்றனர். பணித்தளங்களில் நடைபெறும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும் மற்றும் அவர்களது கல்வி, எதிர்காலத்திற்காகவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 28 கருவந்தியா பணித்தள மருத்துவ மையத்தின் (வுஆரு) மூலமாக பணித்தள மக்களுக்கு மலேரியா, டைபாய்டு போன்ற வியாதிகளைக் குறித்த, சுகாதாரத்திற்கடுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியுள்ள அநேக கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதனால் பயனடைந்தனர். படுக்கையில் வியாதியாய் இருந்த சகோதரர் அஜய் குமாரின் மனைவி மற்றும் பிசாசின் பிடியினால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் சங்கர் சிங் ஆகியோர் ஜெபத்தின் பலனாள் விடுதலை அடைந்தனர். பணித்தளங்களில் சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் சுகம் பெறவும், விசுவாசிகளின் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 29 தரிஹட் பணித்தளத்தில் தையல் பயிற்சியினை நிறைவு செய்த மூன்றாவது அணியினருக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். தொடர்ந்து இங்கு தொடங்கப்படவிருக்கும் நான்காவது அணியினருக்கான பயிற்சியையும் கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிப்போம். நவாட்டா பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படுவதற்கு ஏற்ற நிலம் கிடைக்கவும், விரைவில் ஆலயம் கட்டப்பட்டு ஜனங்கள் கர்த்தரை ஆராதிக்கவும் ஜெபிப்போம்.
செப்டம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்று வரும் ஆலய மறு சீரமைப்புப் பணிகளுக்காகவும், சீரான குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் கல்லறைத் தோட்டத்திற்கான நிலங்கள் விரைவில் கிடைக்கவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கான எதிர்ப்புகள் மாறவும் மற்றும் எதிர்பாளர்கள் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.