ஜனவரி - 27 கூபா பணித்தளத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமின் வாயிலாக, கூபா மற்றும் இப்பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 350 பேர் பயனடைந்தனர். அத்துடன், சௌபியா கிராமத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமின் மூலமாகவும் 268 பேர் பயனடைந்தனர். சிகிச்சையுடன் கிறிஸ்துவின் அன்பினையும் கூறி அவர்களுக்காக ஜெபிக்க கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் மருத்துவ வசதியின்றி காணப்படும் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.
ஜனவரி- 28 திலௌத்து, பஞ்சாரி மற்றும் திலோக்கர் ஆகிய பணித்தளங்களில், கிறிஸ்து பிறப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பணித்தள மக்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின்போது, சுவிசேஷப் பாடல்கள் மற்றும் நாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை சுவிசேஷமாகவும் மற்றும் கைப்பிரதிகள் வாயிலாகவும் கூடிவந்தோர்க்கு அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் தொடர் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.
ஜனவரி - 29 ஹஸ்புரா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்; இக்கூடுகையில், சகோதரி விமலா ஜான்சன் கர்த்தருடைய வார்த்தையுடன் பெண்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தார். பணித்தள பெண்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும், பெண்கள் சமுதாயத்தில் வல்லமையாகப் பயன்படுத்தப்படவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 30 ஹர்க்கா, தரிஹட், பாபுகஞ்ச் மற்றும் இப்பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் விசுவாசிகளின் வீடுகளில் நடைபெற்ற வீட்டு ஜெபக் கூடுகைகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். சைன்புரா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபக் கூட்டத்தில் 50 விசுவாசிகள் கலந்துகொண்டு பல்வேறு குறிப்புக்களுக்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் வீட்டு ஜெபக் கூடுகைகள் பெருகவும், விசுவாசிகளின் வீடுகள் கிறிஸ்துவை அறிவிக்கும் ஸ்தலங்களாக மாறவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 31 பணித்தளங்களில் செய்யப்பட்ட சிறுவர் ஊழியங்களின் மூலமாக 1213 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் நடைபெற்றுவரும் வேதாகம வகுப்புகளில் 50 வாலிபர் ஆர்வமுடன் பங்கேற்றுவருகின்றனர். தன்சா, சடுக்கி மற்றும் கர்மஹி ஆகிய பணித்தளங்களில் கல்வி ஊழியத்துடன் செய்யப்பட்டுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காகவும், கப்பர்புட்டி பணித்தளத்தில் ஆலயம் கட்டப்பட விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம்.
