மத்திய மண்டலம்
டிசம்பர் 28 பல்வேறு பணித்தளங்களில், கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையில் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட 22 விசுவாசிகள், உடன்படிக்கையின் மூலம் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! தரிஹட் பணித்தளத்தில் 3 நாட்கள் நடைபெற்ற உபவாசக் கூடுகையில், 275 விசுவாசிகள் பங்கேற்று, ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக பாரத்துடன் ஜெபித்தனர். பணித்தளங்களில் பெலவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் சுகம் பெறவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 29 திலௌத்து, ராஜ்பூர் மற்றும் நவாட்டா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்புக் கூடுகையில், பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். நவாட்டா பணித்தளத்தில் சுவிசேஷக் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலமாகச் செய்யப்பட்ட நற்செய்தி ஊழியத்தின் மூலமாக, பணித்தள மக்கள் அநேகருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் நற்செய்திக்குச் செவிகொடுக்கவும், இயேசு ஏற்றுக்கொள்ளவும், எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி, நற்செய்திக் குழுக்கள் மற்றும் பல்வேறு சிறுவர் ஊழியங்களின் மூலமாக 2500-க்கும் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. பணித்தளச் சிறுவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காகவும் மற்றும் அவர்களது பெற்றோர் தேவனை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
டிசம்பர் 31 அம்ரிடோலா மற்றும் தாவன்பூர் பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களின் மூலமாக, பணித்தள மக்கள் பலர் இலவச மருத்துவ ஆலோசனையுடன் மருத்துவச் சிகிச்சையையும் பெற்றனர். தொடர்ந்து, கருவந்தியா பணித்தளத்தின் ஜெம்ஸ் இல்லத்தின் சிறுவர் சிறுமியருக்கும் சுகாதாரத்திற்கடுத்த அறிவுரைகளும் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ரோஹ்தாஸ் கோட்டத்திற்கு கல்லறைத் தோட்டத்திற்கான நிலம் விரைவில் வாங்கப்படவும், படுக்கா புத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
