மத்திய மண்டலம்
ஜுலை 27 ஜுன் 10 அன்று, பாபுவா பணித்தள ஆலயத்தில், காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, 'ஒரு நபர் ஒரு ஆத்துமா" என்ற கருப்பொருளினை மையமாகக்கொண்டு நடைபெற்ற சுவிசேஷகர்களை உருவாக்கும் கூட்டத்தில் பௌலியா, K-6 மற்றும் நாகடோலி பணித்தளங்களைச் சேர்ந்த 80 விசுவாசிகள் பங்கேற்றனர். சகோ. விக்டர் மற்றும் சகோ. குணசேகரன் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். இப்பணித்தளங்களில் சுவிசேஷம் அறிவிப்பவர்களாக விசுவாசிகள் மாறவும், பணித்தள ஆலயங்களில் புதிய ஆத்துமாக்கள் சேரவும் ஜெபிப்போம்.
ஜுலை 28 கடந்த மாதத்தில் ரோஹ்தாஸ் கோட்டத்தில் நடைபெற்ற 30 வீட்டுக் கூடுகைகளில் ரோஹ்தாஸ் கோட்டத்தின் பல்வேறு பணித்தளங்களைச் சேர்ந்த 425 விசுவாசிகள் பங்கேற்றனர். இக்கூடுகையின்போது, கிறிஸ்துவை அறியாத மக்களையும் சந்தித்து கிறிஸ்துவின் அன்பினை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் பெருகிவரும் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கைகளுக்காக கர்த்தரைத் துதிப்போம் மற்றும் வரும் நாட்களில் பணித்தளங்களில் வீட்டுக்கூடுகைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம்.
ஜுலை 29 24 இடங்களில் நடத்தப்பட்ட உபவாசக்கூடுகையில் 220 விசுவாசிகள் பங்கேற்றனர்; அத்துடன், கோட்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட இரவு ஜெபங்களில் 250 விசுவாசிகள் பங்கேற்று பணித்தளங்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் ஜெபித்தனர். பெண்களுக்காக நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் 50 பேர் பங்கேற்று ஆசீர்வதிக்கப்பட்டனர். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறப்புக் கூட்டங்கள் வாயிலாக விசுவாசிகள் பெலனடையவும், சுவிசேஷக் கூட்டங்களின் மூலமாக ஆத்துமாக்கள் மந்தையில் சேரவும் ஜெபிப்போம்.
ஜுலை 30 சிக்காரியா கோட்டத்தில் 11 பணித்தள ஆலங்களில் 1362 சிறுவர் சிறுமியருக்கும், ரோஹ்தாஸ் கோட்டத்தில் 14 கிராமங்களில் 1235 சிறுவர் சிறுமியருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இவர்கள் கிறிஸ்துவின் அன்பில் பெலனடையவும், சமுதாயத்திற்குச் சாட்சிகளாக வாழவும், இவர்கள் மூலமாக குடும்பங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.
ஜுலை 31 K-6, சடுக்கி மற்றும் ரோஹ்தாஸ் பணித்தளங்களில் நடைபெற்ற மருத்துவ ஊழியங்களின் வாயிலாக 320 பேர் பயனடைந்தனர். திலௌத்து பணித்தளத்தில் வறுமை நிலையிலிருக்கும் 80 பேருக்கு உணவளிக்கவும், பஞ்சாரி, திலௌத்து மற்றும் செயின்புரா பணித்தளங்களில் இலவச கல்வி ஊழியங்களைச் செய்யவும் கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சமுதாயப் பணிகளுக்காகவும், வறுமை நிலையிலிருக்கும் பணித்தள மக்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.