மத்திய மண்டலம்
நவம்பர் 26 பல்வேறு பணித்தளங்களில் நடைபெற்ற உபவாசக் கூட்டங்களில் பணித்தள விசுவாசிகள் சுமார் 500 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். தேவ செய்தியைத் தொடர்ந்து, விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும், பணித்தள ஊழியங்களுக்காகவும் மற்றும் தேசம் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் விசுவாசிகள் ஒருமனதுடன் ஊக்கமாக ஜெபித்தனர். வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் பீஹார் சட்டமன்றத் தேர்தலுக்காகவும், ஊழியங்கள் தேர்தல் நாட்களில் தடைபடாதிருக்கவும் ஜெபிப்போம்.
நவம்பர் 27 பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலம் விசுவாசிகள் கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவித்தனர். நற்செய்தி அறிவிக்கப்பட்ட கிராமத்தின் மக்கள் இயேசுவை அறிந்துகொள்ளவும், ஊழியத்திற்கு அப்பகுதிகளில் திறந்த வாசல் உண்டாகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 28 சிக்காரியா, கருவந்தியா, நிம்மியாடி, தரிஹட் ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் நற்செய்தி குழு ஊழியங்களின் வாயிலாக 915 சிறுவர் சிறுமியருக்கும், மேலும், கர்மா, பீஷ்ராம்பூர் மற்றும் அம்ரிடோலா ஆகிய பணித்தளங்களின் சிறுவர் காப்பகங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளிகளில் 245 சிறுவர் சிறுமியருக்கும் பாடல்கள் மற்றும் வேத வசனங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்பட்டது. சிறுபிள்ளைகள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், இவர்களது எதிர்காலத்திற்காகவும், இவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.
நவம்பர் 29 தன்சா, சடுக்கி ஆகிய பணித்தளங்களில் ஆதிவாசி பிள்ளைகள் மத்தியில் கிறிஸ்துவின் அன்பினை அறிவித்து, அவர்களை விசுவாசத்தில் வளர்க்கவும், கர்மஹி பணித்தளத்தில் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைச் சந்திக்கவும் மற்றும் பெற்றோரைச் சந்தித்து அவர்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்கவும், ஆண்டவரின் அன்பினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ள காலத்திற்குள் தடையின்றி செய்துமுடிக்கப்படவும், வரும் குளிர் காலங்களில் ஊழியங்கள் தடைபடாதிருக்கவும் ஜெபிப்போம்.
நவம்பர் 30 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ ஊழியங்களின் வாயிலாக கடந்த மாதத்தில் 77 பேர் பயனடைந்தனர். சரீரத்திற்கான சிகிச்சையுடன் சத்தியத்தையும் அவர்களோடு பகிர்ந்துகொள்ள கர்த்தர் உதவிசெய்தார். பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாயிருக்கும் எதிர்ப்புகள் மாறவும், ஆராதனைக்கு உண்டாயிருக்கும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.
