மார்ச் 27 : துவா, சம்பா, தாவன்பூர், பாலேஜா, தேவரியா, சசராம் மற்றும் அம்ரதலாப் ஆகிய பணித்தளங்களில் புதிதாக விசுவாசிகளின் வீடுகளில் வீட்டு ஜெபக் கூடுகைகளைத் தொடங்கவும், புதிய ஆத்துமாக்களுக்கு சுவிசேஷத்தினைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் அவர்களுக்காக ஜெபிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். நாசிரிகஞ்ச் மற்றும் அம்பா பணித்தளங்களில் சுமார் 120 பேர் தவறாது ஆலய ஆராதனைகளில் பங்கேற்றுவருகின்றனர்; தேவனுக்கே மகிமை! வீட்டு ஜெபக்கூடுகைகள் தவறாமல் நடைபெறவும், தடைகள் மாறவும், அநேகர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.
மார்ச் 28 : சேவஹி பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில் 50 விசுவாசிகள் பங்கேற்றனர்; சகோ. கில்பட் குமார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். மேலும், படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்ற விசுவாசிகளுக்கானக் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர்; இக்கூடுகையில், போதகர் ஜெயக்குமார் மற்றும் அவரது துணைவியார் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளரவும், வேத வசனங்களை அறிந்துகொள்ளவும், ஆத்தும ஆதாயகர்களாக தேவ ராஜ்யத்திற்காகச் செயல்படவும் ஜெபிப்போம்.
மார்ச் 29 : கருவந்தியா பணித்தளத்தில் நடைபெற்ற ரோஹ்தாஸ் மற்றும் சிக்காரியா கோட்ட ஊழியர்களுக்கான குடும்பக் கூடுகையில், ஊழியர்கள் குடும்பமாகப் பங்கேற்றனர். சைன்புரா பணித்தளத்தில் நடைபெற்ற இரவு ஜெபத்தில், 30 விசுவாசிகள் பங்கேற்று, பணித்தள ஊழியங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களுக்காகவும் மற்றும் தேசத்திற்காகவும் பாரத்துடன் ஜெபித்தனர். படுக்காபுத்வா பணித்தளத்தில் நடைபெற்றுவரும் பகற்பாதுகாப்பு மையக் கட்டிடப் பணிகளுக்காகவும், சுன்ஹட்டா பணித்தளத்தில் விரைவில் நிலம் வாங்கப்படவும் ஜெபிப்போம் மற்றும் திலௌத்து, நவாட்டா பணித்தளங்ககளின் நிலப் பிரச்சனைகள் விரைவில் தீரவும் ஜெபிப்போம்.
மார்ச் 30 : பணித்தளங்களில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி மற்றும் சிறுவர் ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியருக்கு வேத வசனங்கள், பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் மூலமாகக் கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். லூக்கா, பஞ்சாரி, தும்பா மற்றும் தலா பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கட்டிடப்பணிகள் தடையின்றி நடைபெறவும் மற்றும் பணித்தளங்களில் நடைபெற்றுவரும் மருத்துவ முகாம்களுக்காகவும் ஜெபிப்போம்.
மார்ச் 31 : பெலாய், ராம்நகர் மற்றும் புதிவான் பணித்தளங்களில் 30 பேர் இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, ஆலய ஆராதனையில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர் மற்றும் 10 பேர் கிறிஸ்துவின் மேலுள்ள தங்கள் விசுவாசத்தை உடன்படிக்கையின் மூலம் உறுதிப்படுத்த தங்களை அர்ப்பணித்துள்ளனர்; தேவனுக்கே மகிமை! சுகவீனமாயிருக்கும் விசுவாசிகள் விரைவில் குணமடையவும், விசுவாசிகளின் குடும்பத்தினர் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம்.
